நாகர்கோவில், ஜன.8 : சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் கன்னியாகுமரி அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் அதிகாலை 4.40க்கு நாகர்கோவில் சந்திப்பு வந்தடையும். பின்னர் 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 5.30க்கு சென்றடையும். கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் கன்னியாகுமரி அதி விரைவு ரயிலில் வருவது வழக்கம். ஆனால் நேற்று காலை இந்த ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதம் ஆனது. அதிகாலை 4.40க்கு நாகர்கோவில் வர வேண்டிய ரயில் காலை 5.50க்கு தான் நாகர்கோவில் சந்திப்பு வந்தது. பின்னர் காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காலை 6.30க்கு கன்னியாகுமரியை சென்றடைந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில் வந்த நிலையில் பொது பெட்டியில் திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணி காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இதன் காரணமாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதம் ஆனது என அதிகாரிகள் கூறினர்.
