திருச்செங்கோடு, ஜன. 7: தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையையொட்டி, ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டை தாரருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஆகிய பரிசு தொகுப்பும், அதனுடன் ரூ.3000 பணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசு பொருட்களை பெற, ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோத கூடாது என்பதற்காக, அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், 3 நாட்களுக்கு என பிரித்து டோக்கன் வழங்கப்படுகிறது. திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைக்தாரர்களுக்கும், அந்தந்த ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். வரும் 8ம் தேதி முதல், பொருட்கள் வழங்க உள்ளதால், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, 15வது வார்டு பகுதியில் உள்ள குலாலர் தெரு மற்றும் அண்ணா பூங்கா ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினார்.
