×

இரட்டை இன்ஜின் அரசின் பணிகளை மக்கள் கொண்டாட வேண்டும் கடந்த காங்., ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டதை மறந்துவிடக் கூடாது பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரி, மார்ச் 2: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டதை மறந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் இட்டை இன்ஜின் அரசின் பணிகளை மக்கள் கொண்டாட வேண்டும் என புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், எம்எல்ஏக்கள், தலைமை செயலர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் கார் மூலம் பிரதமர் மோடி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.2,714 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: புதுச்சேரியில் உள்ள குடிமகனும் சிகிச்சைக்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை வரக்கூடாது. மற்ற ஊரில் உள்ளவர்கள் புதுச்சேரிக்கு வந்தால் நல்ல சிகிக்சை கிடைக்கும் என்று வர வேண்டும். புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக மாற்ற முடியும் என்ற உறுதியாக நம்புகிறேன்.

புதுச்சேரியில் ஏற்கனவே 9 மருத்துவ கல்லூரி உள்ளது. ஜிப்மரில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் நவீன மையமாக்கப்படுகிறது. சுகாதார திறன் மேலும் அதிகரிக்கப்படுகிறது. 3 தீவிர சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இந்த புதிய தீவிர சிகிச்சை பிரிவுகள் மக்களுக்காக இயங்க போகிறது. போக்குவரத்து இணைப்பு நாட்டின் முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு. கிராமப்புற சாலைகளை மேம்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை எப்படி குறைக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். ரூ.1,000 கோடிக்கு மேல் நலத்திட்டங்களை அறிவித்துள்ளோம். இதில் ரூ.440 கோடியில் மேம்பாலமும் அடங்கும்.
கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலையை மேம்படுத்தும் பணிகள் சென்னைக்கான சாலை இணைப்பை விரைவாக்குகிறது. இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் 2 மணி நேரத்தில் செல்ல முடியும்.

புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையை ஏற்கனவே முடித்துவிட்டோம். காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையும் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை திட்டங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் புதுச்சேரியின் சில பகுதிகளை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பொருளாதார மையங்களுடன் இணைக்கிறது. இதனால் புதுச்சேரி பொருளாதாரம் மேம்படும். சுற்றுலா, வர்த்தகம், தொழில் என எல்லாவற்றையும் மேம்படுத்தும். புதுச்சேரி சுற்றுலா பலம் வாய்ந்ததாக உயர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாவில் புதுச்சேரி மிகப்பெரிய பங்கை அளித்து கொண்டிருக்கிறது. வார இறுதியில் மக்கள் எல்லாம் வருகை தரும் வசந்த பூமியாக புதுச்சேரி அனைவரையும் ஈர்த்து கொண்டிருக்கிறது.

ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுகாதார சுற்றுலா செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் நாங்கள் புதுச்சேரி சுற்றுலாவை புதிய உயரத்துக்கு எடுத்துக் செல்வோம். பிரசாத் திட்டத்தின் மூலம் பல்வேறு கோயில்களில் புனித யாத்திரை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அரவிந்தர், அன்னை ஆரோவில்லை உலகளாவிய அமைதி நகரமாக உருவாக்கினார். இன்று (நேற்று) ஆரோவில் ஆன்மீக மகோற்சவம் நடைபெறுவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் மொழி, இனம், மதங்களை கடந்து மக்களை ஒன்றாக இணைக்கின்றன.

இரட்டை என்ஜின் அரசாங்கத்தில் செய்யப்படுகின்ற நல்ல பணிகளை மக்கள் கொண்டாடுவது முக்கியம். அதைவிட கடந்த ஆட்சியில் பல விஷயங்கள் எத்தனை மோசமாக இருந்து என்பதை மக்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள். கடினமான அந்த ஆண்டுகள் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஊழல் பெருகி குற்றங்கள் அதிகமாகி, ஏழைகள் துன்பப்பட்ட கடினமான காலத்தை நாம் மறந்துவிடக் கூடாது. ரேஷன் கடையில் அரிசி இல்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. குண்டர்களும், போதை பொருள் மாபியாக்களும் அச்சமில்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது.
காங்கிரஸ் புதுச்சேரியை டெல்லியில் உள்ள ஒரு தனிப்பட்ட குடும்பத்தோட ஏடிஎம் போல் பயன்படுத்தியது. காங்கிரஸ் புதுச்சேரி வளர்ச்சி பயணத்தை தடுக்கும் வேகத்தடையாகத்தான் இருந்திருக்கிறது. புதுச்சேரி வளர்ச்சியை தடுத்த அதே சக்திகள் மீண்டும் புதுச்சேரியில் அதிகாரத்துக்கு வர ஏங்கி கொண்டிருக்கிறது. ஊழல், குற்றச்செயல்கள் புரிந்த அந்த கட்சி, மீண்டும் புதுச்சேரியில் ஆட்சிக்கு வர வேண்டுமா? இதை புதுச்சேரி மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று தெரியும்.

புதுச்சேரி நம்முடைய சுதந்திர போராடத்தில் மிக முக்கியமான மைய புள்ளியாக இருந்தது. பல தலைவர்கள் இங்குதான் உருவானார்கள். இங்கேதான் உரமானார்கள். அவர்களில் சிலர் இங்கு இருந்துதான் பணியாற்றினார்கள். இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைக்க புதுச்சேரி மிகவும் உதவிகரமாக இருந்தது. இப்போது நமக்கு ஒரு கடினமான சவால் உள்ளது. 2047க்குள் வளர்ச்சி அடைந்த புதுச்சேரியையும், வலிமையான இந்தியாவையும் உருவாக்க வேண்டும. புதுச்சேரியின் இரட்டை என்ஜின் அரசு இந்த பணியில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். சிறந்த புதுச்சேரிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Congress ,Modi ,Puducherry ,Puducherry… ,
× RELATED வானூர் அருகே கிளியனூரில்...