- அமித் ஷா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- செல்வ பெருந்தகை
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- பாஜக
- மத்திய உள்துறை அமைச்சர்
- திமுக
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பாஜ, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று பாஜ கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பங்கேற்கவில்லை. பாஜவோடு நிர்ப்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் கூட்டத்தில் பேசும் போது, அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறாரே தவிர, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதோடு, மோடியின் தலைமையில் அணிவகுப்போம் என்று அமித்ஷா பேசுகிறார்.
இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா? இதுவரை அதிமுகவை தவிர குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த கட்சியும் பாஜ இருக்கிற கூட்டணியில் சேர முன்வரவில்லை. அதிமுக- பாஜ கூட்டணியைப் பொறுத்தவரை எங்கே தொடங்கி, எங்கே முடிவடைகிறது என்பதிலே தெளிவில்லை, குழப்பம் நீடிக்கிறது.தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜ அரசையும், கூட்டணியில் சேர தவம் கிடக்கிற அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஒருமுறையல்ல, இருமுறையல்ல. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் அவரது ஒவ்வொரு சுற்றுப்பயணமும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ப்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் பெருகும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
