சென்னை: சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது அமெரிக்கா கொடூரமான ராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசையும் கைது செய்து, தனது நாட்டிற்கு, அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமெரிக்காவின் இந்த செயல்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்திடக் கோரியும், அமெரிக்கப் படைகள் வெனிசூலாவை விட்டு உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசு அமெரிக்காவை கண்டிப்பதோடு ‘வெனிசுலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்குகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
