சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேமுதிக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் பெட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில் மாவட்ட செயலாளர்கள் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எழுதி அதில் போட்டனர். தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேமுதிகவினரிடம் கலந்தாலோசனை செய்து, மாவட்ட செயலாளர்கள் வாக்களித்துள்ளனர். அதனை நாங்கள் ஓப்பன் பண்ணி பார்ப்போம்.
உறுதியாக எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தான் தேமுதிக அமைக்கும். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதனால் நிச்சயமாக நல்ல கூட்டணி அமையும். நிச்சயம் மாபெரும் ஒரு வெற்றியை பெறுவோம். ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன். அதிமுகவில் ராஜ்யசபா சீட் என்பது ஏற்கனவே பேசப்பட்டது, சொல்லப்பட்டது. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நடப்பது சட்டமன்ற தேர்தல். எங்களுடைய முழு கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் இருக்கும். திமுக, அதிமுக, தவெக, சீமான் என்று 4 கூட்டணி உள்ளது. இதை தாண்டி இன்னொரு கூட்டணி வருமா என்பது தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான். விஜயகாந்தின் குரு பூஜையில் அனைவரும் கலந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள். தேமுதிகவை வரவேற்கிறார்கள். அதனால் நிச்சயம் உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் அறிவிப்போம். தை பிறந்தால் வழிபிறக்கும். தை மாதம் பிறந்த உடன் கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்து பக்கமும் தொடங்கும். அப்போது பேச்சுவார்த்தை தொடங்கும். விரும்பமனு பெறுதலை ஒரு நல்ல நாளில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம். 2026 தேர்தல் ஒரு மாறுப்பட்ட தேர்தலாக இருக்கும். மக்கள் விரும்பிய அணி நிச்சயம் வெற்றி பெறும். எல்லாருக்கும் மந்திரி சபையிலும் அங்கம் வகிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது ஓங்கி ஒலிக்கிறது. அதற்கான சாத்தியம் நிறைய இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
