சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக சூர்யமூர்த்தி அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காரணமாக இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக விசாரணை தாமதமாகி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், பீகார் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்து அங்கு தேர்தலும் முடிந்து விட்டது. அந்த மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் அறிவித்து 45 நாட்கள் ஆன பிறகும் இதுவரை இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை தொடங்கப்படவில்லை. தமிழகத்திலும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்து, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முறையான விசாரணை நடத்தாமல் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினால், அது ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இரட்டை இலை சின்ன விவகாரம் குறித்த விசாரணையை முடிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
