×

அதிமுக தலைமையை விமர்சித்து கட்சியில் இருந்து வெளியேறிய திருவள்ளூர் நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

சென்னை: கட்சி தலைமையை விமர்சித்து கடிதம் எழுதி வெளியேறிய திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் நேற்று முன்தினம் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். முன்னதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை தெய்வமாக போற்றி கட்சி பணியாற்றி வரும் என் போன்ற தொண்டர்களை தற்போதைய தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பாதைக்கு செல்லாமல் வீழ்ச்சி பாதைக்கு செல்வது குறித்து கவலைப்படாமல் இருப்பது மனவேதனை அளிக்கிறது. என் போன்ற உண்மை தொண்டர்களின் உழைப்பை ஏற்கும் மனநிலை கட்சி தலைமைக்கு இல்லாத காரணத்தினால், எனது அடிப்படை உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்’’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Tiruvallur ,AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,Thiruvallur district ,deputy secretary ,Bhaskaran ,Thiruvallur ,district ,
× RELATED குன்றத்தூர் அருகே அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் சாவு