திருமலை: ஆந்திராவில் எரிவாயு கிணற்றில் திடீர் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அருகிலுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். எரிவாயு கசிவால் 30 ஏக்கர் பரப்பளவு மீன் பண்ணைகள், 600 தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளது. ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் மாலிகிபுரம் மண்டலம் இருசுமண்டா கிராமத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி எரிவாயு கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று உற்பத்தியில் இருந்த ஓ.என்.ஜி.சி. கிணற்றில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு நேற்று மதியம் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட எரிவாயு கசிவால் திடீரென கச்சா எண்ணெய் கலந்த பெரிய அளவிலான எரிவாயு கிராமம் முழுவதும் பரவியது. மூடுபனி போன்ற வெள்ளை வாயு அப்பகுதியை மூடியது. கசிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே எரிவாயு தீப்பிடித்தது. தென்னை தோப்புகள் மற்றும் வயல்களுக்கு மத்தியில் எரிவாயு பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறும் என கருதிய அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கை விடுத்தனர். ‘கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க வேண்டாம், உடனடியாக வெளியே வர வேண்டும்’ என்று பஞ்சாயத்து அதிகாரிகள் மைக்ரோபோன் மூலம் அறிவித்ததால், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் லக்கவரத்தில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தகவல் கிடைத்ததும் போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. தொழில்நுட்பக் குழுக்கள் கசிவைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். திடீரென தீ அதிகளவில் ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்களும் நெருங்க முடியாமல் விலகி ஓடினர். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த தீ விபத்தால் இதுவரை எரிவாயு கிணற்றை சுற்றிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 30 ஏக்கர் பரப்பளவு மீன் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
