குன்னம், ஜன. 5: குன்னம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருடிய மர்மநபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கீழப் பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தொட்டி மகன் ஆறுமுகம். இவர் மின் மோட்டார் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தனது விவசாய நிலத்திற்கு செல்லாமல் நேற்றுமுன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது வயலில் இருந்த மின்மோட்டார் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மின் மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது. கடந்த சில வருடங்களகாவே இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகம் வயலில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே விவசாய வயல்களில் மின்மோட்டார் திருடும் கும்பலை போலீசார் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
