திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தனியார் மருத்துவமனையில் இளம்பெண் கழிவறையில் குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள கழிவறைக்குள் சென்றுள்ளார். கழிவறையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பச்சிளங்குழந்தையை அங்குள்ள கழிவறை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அவர் இருக்கைக்கு சென்று விட்டார்.
இதையறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இறந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
