×

தூய்மையான குடிநீர் கேட்டு கடம்பூர் பொதுமக்கள் சாலை மறியல்

தா.பழூர், ஜன. 1: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது கடம்பூர் கிராமம். இக்கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலமாக, குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நிறைந்துள்ளதால், மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து சப்ளை செய்யப்படும் நீரை, பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை கடம்பூர் பேருந்து நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி சக்கரவர்த்தி மற்றும் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அரசு அலுவலர்கள், போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மறியல் ேபாராட்டம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, குருவாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் இருந்து கடம்பூர் பகுதிக்கு பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கூறினர். இப்போராட்டத்தால் குருவாடி – அரியலூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kadambur ,Tha.Pazhur ,Vikramangalam ,Ariyalur district ,
× RELATED கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு...