×

2026 தேர்தலுக்கு பிறகும் திமுக ஆட்சியே தொடரும்; அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

சாயல்குடி, ஜன.1: நலத்திட்டங்களால் பொதுமக்கள் விரும்பும் ஆட்சியாக இருப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதிஸ் டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வனம்,கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார்.

இதில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசும்போது, கிராமப்புற ஏழை,எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய நுாறுநாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு சிதைக்க முயற்சித்து வருகிறது. தமிழ்நாடு அரசிற்கு முறையாக வழங்கக் கூடிய உரிய நிதியை வழங்குவது கிடையாது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் ஏதாவது பிரச்னையை கிளப்பி, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜ ஈடுபடுகிறது. இதற்கு அதிமுகவும் துணை போகிறது. மதவாத சக்திகளையும், அதற்கு துணை நிற்பவர்களையும் ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

4 துண்டுகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக இந்த தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும், மற்றவர்கள் திமுகவிற்கு போட்டியே கிடையாது. தமிழக மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்க கூடியவர்கள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டிதொட்டி எங்கும் முதல்வரின் நலத்திட்டங்கள் சென்றடைந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் விரும்புகின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதற்கு துணையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக தந்து கொண்டிருப்பதால் வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக்கே வாக்களிப்பார்கள். 2026 தேர்தலுக்கு பிறகும் திமுக ஆட்சியே தொடரும். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’’ என பேசினார்.

Tags : DMK ,2026 elections ,Minister ,Rajakannappan ,Sayalgudi ,Deputy Chief Minister ,Udhayanithis Dhal ,S.Tharaikudi ,Sayalgudi… ,
× RELATED ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்