மதுரை, ஜன. 1: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், மதுரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சியின் வெற்றியை தொடர்ந்து, இந்தாண்டு தமுக்கம் கலையரங்கில் சுமார் 280 ஸ்டால்களுடன் பிரம்மாண்ட பொருட்காட்சி நேற்று துவங்கியது. இதனை மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், விருதுநகர் இதயம் நிறுவன இயக்குநர் இதயம் வி.ஆர்.முத்து, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், ஆலோசகர் ஜெயபிராகஷ், கண்காட்சியின் சேர்மன் மாதவன், அப்பள வியாபாரிகள் சங்க மாநில தலைவர் திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜன.4ம் தேதி வரை நடைபெறும் இப்பொருட்காட்சியில், பொதுமக்களை கவரும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, செல்போன்கள், டிவி, மெத்தை, மிக்சி உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகிறது. இதன் இறுதி நாளில் பம்பர் பரிசாக கார், டூவீலர் மற்றும் பிரிட்ஜ் வழங்கப்பட உள்ளது.
தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இப்பொருட்காட்சியில், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். குளிர்பானங்கள், அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள், சிறுதானியம், ஆயத்த ஆடைகள், தங்கம், வைர நகைகள், ரியல் எஸ்டேட், சிட் பண்ட்ஸ், சோலார், கேட்டரிங், டெய்ரி ப்ராடெக்ஸ், பொம்மைகள், மொபைல்ஸ் மற்றும் கணினி, அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், ஹெர்பல்ஸ், அக்ரி ப்ராடெக்ட்ஸ் போன்றவற்றுடன் டிராவல்ஸ், வணிக வாய்ப்புகள், இணையவழி வர்த்தகம், மருத்துவமனைகள், வங்கிகள், புட் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
