- உசிலம்பட்டி
- திண்டுக்கல்
- மதுரை உசிலம்பட்டி
- திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கிளப்
- மேட்டுப்பட்டி கால்பந்து அகாடமி
- புத்தாண்டு…
திண்டுக்கல்,ஜன.1: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை உசிலம்பட்டி அணி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் மேட்டுப்பட்டி கால்பந்து அகாடமி சார்பில் புத்தாண்டை முன்னிட்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மதுரை உசிலம்பட்டி கால்பந்து அணி, மதுரை நோபில் அணியை வென்று முதலிடம் பிடித்தது. மூன்றாம் இடத்தை திண்டுக்கல் அணி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உடற்கல்வி ஆசிரியர் சார்லஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக 45வது வார்டு செயலாளர் பிரகாஷ், மேற்குபட்டி பங்குத்தந்தை செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் விவேக் ஜான்சன், பாஸ்டின், எட்வின், ஆல்பர்ட், ஜஸ்டின், கஷ்மீர் ராஜா, பூங்காவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
