×

வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்து, அந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரிய செயல். சமூக வலைதள மோகத்தால் மிருகத்தனமாக போக்கிற்கு மனித சமூகம் மாறி வருவது வெட்கக்கேடானது. இன்று தமிழகத்தில் வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலம் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த மனித உயிரானாலும், மனிதாபிமானத்துடன் பாதுகாப்பான சூழல் அமையப்பெறுவதை உறுதி செய்து மதிக்கப்பட வேண்டும். குடும்ப சூழலுக்காக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் சென்று பொருளாதாரம் ஈட்டும் இளைஞர்கள் மீது இத்தகைய வன்முறை தாக்குதல் போதை கலாச்சாரத்தால் உருவானது என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.எதை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சமூக குற்றங்களை கூட சாதாரணமாக செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ள சூழலில், மக்கள் மத்தியில் வைரல் ஆக வேண்டும் என்று இப்படி வெறி பிடித்திருக்கிறார்கள். அந்த வெறியை முறியடிக்கவும், சமூக சீர்கேட்டு குற்றத்தின் அடிப்படையான போதை பொருள் ஊடுறுவலை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலும், ரீல்ஸ் மோகம் தலைக்கேறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு அல்லது பிற நாடுகளில் உள்ளது போல முற்றிலும் தடை செய்திட வேண்டும் அல்லது நெறிமுறைப்படுத்த வேண்டும். பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவித செயலும் ஆபத்து மற்றும் அபத்தமானதே. மேலும், குற்றவாளிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற பாரபட்சம் காட்டி அவர்களை சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பாமல், கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கினால் மட்டுமே மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Government ,Sarathkumar ,Chennai ,Tamil government ,North State ,Suraj ,Trithani ,
× RELATED தொடர் விடுமுறை, புத்தாண்டு...