புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அவர்களிடம் நேற்று முன்தினம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. 2வது நாளாக நேற்றும் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிபிஐ அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அப்போது பதட்டப்பட்ட தவெக நிர்வாகிகள் வேறு யாருக்கும் புதியதாக சம்மன் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இதில் குறிப்பாக ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் கரூர் சம்பவம் குறித்து நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய்யை டெல்லிக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக அடுத்த ஒரு சில தினங்களில் இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தரப்பில் இருந்து விஜய்க்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
