×

அதிமுக களத்தில் இல்லையென்பது முட்டாள்தனம் தவெக கடைக்கு வியாபாரமே ஆகல… விஜய் நாவை அடக்கி பேசணும்… செல்லூர் ராஜூ எச்சரிக்கை

சோழவந்தான்: தவெக கடைக்கு வியாபாரமே ஆகல. அதிமுகவை களத்தில் இல்லையென்ற சொல்லும் விஜய் நாவை அடக்கி பேசணும் என்று செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்து உள்ளார். மதுரை அருகே கீழமாத்தூரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அப்போது அவரிடம், நிருபர்கள், ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி. அதிமுக களத்தில் இல்லை என்பது போல் நடிகர் விஜய் பேசி வருகிறாரே’’ என்றனர்.

அதற்கு பதிலளித்து செல்லூர் ராஜூ பேசியதாவது: நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுகவை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ என்ன மக்கள் பணி செய்தாய்? எத்தனை தேர்தலைச் சந்தித்தாய்? ஏதாவது இடைத்தேர்தலில் நின்றாயா? கூட்டம் கூடுவதை வைத்து செல்வாக்கு இருப்பதைப் போல பேசக்கூடாது. மலேசியாவில் விஜய்க்கு கூட்டம் கூடியது கூட ஒரு மாயை தான். நான் அரசியல் இருக்கலாமா? வேண்டாமா என்று அங்கு மக்களிடம் கேட்கிறார். அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லை. வானத்தில் ஒரே சந்திரன்தான். அதே போல் பூமியில் ஒரே எம்.ஜி.ராமச்சந்திரன் மட்டும் தான். தேவையில்லாமல் பேசக்கூடாது.

தவெக கட்சி கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. நடிகை நயன்தாரா, நடிகர் வடிவேலு வந்தால் கூட தான் கூட்டம் கூடும். டி.ராஜேந்தருக்கும் தான் கூட்டம் கூடியது. தனியா கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சு? நடிகர் திலகம் சிவாஜி, நடிகர் பாக்யராஜ் கூடத்தான் கட்சி ஆரம்பிச்சாங்க? அதே போல் விஜய்யும் ஆகி விடக்கூடாது. ஏன் நானே விஜய் கட்சி ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். எல்லோரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது. எங்கள் தலைவர் படிப்படியாக கட்சியை வளர்த்து தான் ஆட்சியைப் பிடித்தார். எங்களை களத்தில் இல்லை என விஜய் சொல்வது முட்டாள்தனம். நாவை அடக்கி பேசணும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம்; எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு கூறினார்.

Tags : Vijay ,Cellur Raju ,Chozhavandan ,Kalamatur ,Madurai ,
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உகந்தது...