×

மன்னார்குடியில் அரசுப்பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு

மன்னார்குடி, டிச. 30: அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கதவுகள் சரிவர இயங்குகிறதா என்பது குறித்து மன்னார்குடியில் நாகை மண்டல பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசுப்பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பயணிகள் படிக்கட்டிலிருந்து விழுவதை தவிர்க்கும் நோக்கில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக கதவுகளை மூடி இயக்க வேண்டும் என்ற விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், கதவின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நாகை மண்டலத்திற்குட்பட்ட மன்னார்குடி பணிமனையில் இருந்து 7 மாற்று பேருந்துகள் உள்பட 78 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில், 22 பேருந்துகள் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் மகளிருக்கென கட்டனமில்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் கதவுகளை ஓட்டுநர்கள் சரிவர மூடி திறக்கிறார்களா என அவ்வப்போது போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மன்னார்குடி பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.ஆய்வின் போது, துணை மேலாளர் (தொழில் நுட்பம்) ராமமூர்த்தி, கிளை மேலாளர் மதன்ராஜ், உதவி பொறியாளர்கள் மணிமாறன்(வணிகம்), கண்ணன்(கட்டிடம்), செக்கிங் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், பேருந்து நிலைய கண்ட்ரோலர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Mannargudi ,Naga Zone ,General Manager ,Rajendran ,Tamil Nadu ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்