×

கோயில்களில் முதல் மரியாதை எப்போதும் கடவுளுக்குதான் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில் தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, காஞ்சி காமகோடி பீடம், சங்கர மடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம், உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம், சோசலே ஆகிய மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோயிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், மடாதிபதிகளுக்கு மரியாதை தருவது குறித்து, அறநிலைய சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். இது சம்பந்தமாக அறநிலையத் துறை அதிகாரியை அணுகி நிவாரணம் கோரலாம் என்று மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

Tags : GOD ,CHENNAI HIGH COURT ,Chennai ,iCourt ,Kanchipuram ,Devaraja Swami Temple ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...