சென்னை: அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து, நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த முறைகேட்டுக்கு பதிவுத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதற்கான, வீடியோ ஆதாரமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த சாலைகள் அமைப்பதற்காக வீடுகள், நிலங்கள் இருந்தால் அவற்றை கையகப்படுத்தி, நிலத்தின் உரிமையாளர்கள் கேட்கும் தொகையை நெடுஞ்சாலைத்துறை வழங்கும். இந்த சாலையில் அதுபோல நிலங்களை கையகப்படுத்த வருவாய்த்துறை தாசில்தார் பரிமளகாந்தன் நியமிக்கப்பட்டார். இவர், நெடுஞ்சாலைத்துறைக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கினார். அதில், சோழிங்கநல்லூர் வட்டத்தில் நீலாங்கரையில் 1050 சதுர மீட்டர் நிலத்திற்கு போலியான ஆவணங்கள் மூலம் நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.16 கோடியே 18 லட்சம் ரூபாய் நடராஜன் என்பவர் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, நிலமோடி தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால், இந்த இடத்தை சுப்பிரமணிய அய்யர் என்பவரிடம் இருந்து கணபதி, அசோகன் ஆகியோர் வாங்கியதாகவும், அவர்களில் அசோகன் இறந்து விட்டதால், அவரது வாரிசுகள் மற்றும் கணபதி ஆகியோரிடம் இருந்து ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சி.ஏ.நடராஜன் என்பவர் வாங்கியதாக நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் முன் ஆவணம், பட்டா, சிட்டா இல்லாமல் போலியான ஆவணத்தை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இதற்காக நடராஜன் நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகம் சென்றபோது அங்கு உதவியாளர் ரமேஷ் கண்ணன், சார்பதிவாளர் சண்முகம் ஆகியோர் ஆவணங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். நடராஜன் கொடுத்த ஆவணத்ைத சரி பார்க்காமல் ஜாலியாக சிரித்து பேசியபடி பதிவு செய்து கொடுத்துள்ளனர் என்று தெரியவந்தது. வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால், முன் ஆவணமாக ஒரிஜினல் பத்திரம், பட்டா, சிட்டா, இசி ஆகியவை இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தப் பதிவு மூலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலைக்காக எடுக்கப்படும் இடம் என்னுடைய என்று கூறி இந்த போலியான பதிவு ஆவணங்களை காட்டி ரூ.16.18 கோடி வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இதனால், மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலகம் சென்று வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் குற்றவாளிகளுடன் ஜாலியாக சிரித்து பேசியபடி வெறும் ஆவணங்களை மட்டும் பதிவு செய்து கொடுத்தது தெரிந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நடராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த முறைகேடு செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த ஒரு இடம் மட்டுமல்லாது இதுபோல மேலும் 10 இடங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து சுமார் ரூ.160 கோடி வரை நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுத்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நடராஜனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது அவரது வங்கிக் கணக்கிற்கு மட்டுமே ரூ.160 கோடி வந்துள்ளது. இந்த 10 இடமும் அவருக்கு சொந்தமானது என்று போலி ஆவணங்களை தயாரித்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேட்டுக்கு தாசிலர்தார்கள் பரிமளா காந்தன், ஸ்ரீதர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், பதிவுத்துறையில் சார்பதிவாளர் சண்முகம், உதவியாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதில், உதவியாளர் ரமேஷ் கண்ணன், சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றியவர். இதனால், அவருக்கு சென்னையில் முக்கிய விஐபிக்கள், இதுபோல போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்கிறவர்களை முழுமையாக தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த முறைகேட்டுக்கு பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த்துறையில் உள்ள சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்த வரும்படி பதிவுத்துறை அதிகாரிகள் சண்முகம், ரமேஷ் கண்ணன் ஆகியோருக்கு, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியவுடன் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். தற்போது முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். பத்திரப்பதிவு அதிகாரிகளை கைது செய்தால், பதிவுத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரிகள் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இவர்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்ற முழுவிவரங்களும் தெரியவரும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
