×

திருப்போரூர்-செங்கல்பட்டு இடையே சாலையோர செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்: அகற்ற வலியுறுத்தல்

 

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு வரை செம்பாக்கம், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் வழியாக 27 கி.மீ. தூர சாலை உள்ளது. சென்னையில் இருந்து கத்திப்பாரா, தாம்பரம், வண்டலூர் வழியாக தென் மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களில் பெரும்பாலானவை ஜி.எஸ்.டி. சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓ.எம்.ஆர், திருப்போரூர் வழியாக செங்கல்பட்டு செல்கின்றன. இதனால் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு சாலை பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறி வருகிறது.

திருப்போரூரில் இருந்து செம்பாக்கம் வரை இச்சாலையில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புள்ளி மான்கள், மிளா மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள், உடும்புகள் என பல வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான புதர்ச்செடிகள் வளர்ந்து சாலையை அடைத்துக் கொண்டுள்ளன. இதனால் இருவழிகளிலும் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் தங்களது வாகனங்களை ஓட்ட இயலாத நிலை உள்ளது. சாலையின் நடுவே எல்லா வாகனங்களும் பயணிப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

திருப்போரூரில் இருந்து செம்பாக்கம் வரை சாலையை அடைத்துக்கொண்டு இருக்கும் இந்த புதர்ச்செடிகளை அகற்றினால் வாகனங்கள் எவ்வித பிரச்னையும் இன்றி செல்ல முடியும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இச்சாலையை பராமரிக்கும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை திருப்போரூரில் இருந்து செம்பாக்கம் வரை சாலையை அடைத்துக் கொண்டிருக்கும் புதர்செடிகளை அகற்ற வேண்டும் என்பது கோரிக்கையாக எழுந்துள்ளது.

Tags : Thiruporur-Chengalpattu ,Tiruporur ,Chengalpattu ,Cembpakkam ,Karumbakkam ,Mullipakkam m. ,Chennai ,Kathipara ,Thambaram ,Vandalur ,G. S. D. Heavy ,
× RELATED தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா ஆந்திராவில் கைது