சென்னை: இந்தியாவிலேயே இந்தாண்டில் சென்னையில் தான் வீடு விற்பனை அதிகமாகியுள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களில் வீடு விற்பனை குறைந்து வரும் நேரத்தில், சென்னை மட்டும் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் 7 பெரிய நகரங்களில் ஒட்டுமொத்தமாக வீடு விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் சென்னையில் சுமார் 22,180 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட நல்ல முன்னேற்றமாகும்.
2024ம் ஆண்டில் பெரிய நகரங்களில் வீடு விற்பனை 4 சதவீதம் குறைந்தது. அந்த ஆண்டில் சென்னையிலும் 19,220 வீடுகள் மட்டுமே விற்பனையாகின. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் குறைவு. ஆனால் 2025ல் சென்னை மீண்டும் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. மும்பை பகுதியிலும் புனே நகரிலும் வீடு விற்பனை மிகவும் அதிகமாக குறைந்துள்ளது.
டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற மற்ற பெரிய நகரங்களிலும் விற்பனை குறைந்திருக்கிறது. ஐ.டி. துறையில் வேலை இழப்புகள், சர்வதேச அளவில் பதற்ற நிலை போன்றவற்றால் பொருளாதாரம் ஸ்திரமாக இல்லை. இதனால் மக்கள் வீடு வாங்குவதில் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வீடுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததும் விற்பனை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வீடுகள் குறைவாக விற்றாலும், அதன் மதிப்பு அதிகமாக இருந்தது. 2025ல் 7 முக்கிய நகரங்களில் விற்பனையான வீடுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024ஐ விட 6 சதவீதம் அதிகம். அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளை வாங்குபவர்கள் தொடர்ந்து அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம்.
மற்ற நகரங்களில் ரியஸ் எஸ்டேட் துறை சிக்கல்களை எதிர்கொண்ட நேரத்திலும் சென்னையில் ரியல் ஸ்டேட் சிறப்பான வளர்ச்சியை காட்டுகிறது. சென்னை நகரில் மேற்ெகாள்ளப்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள், வாழத்தகுதியான நகரம் போன்ற பல காரணங்கள் சென்னையில் வீடு விற்பனை உயர மற்றொரு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
