×

எது பொய், எது மெய் என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் 90 நாட்களில் பொய் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது: எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: அடுத்த 90 நாட்களில் பொய் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். அதேநேரத்தில் எது பொய், எது மெய் என்பதை செய்தியாளர்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை, பத்திரிக்கையாளர் மன்றம், எவர்வின் குழுமம் இணைந்து உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகலந்து கொண்டு மன்ற உறுப்பினர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், எர்வின் பள்ளிக் குழுமத்தின் நிறுவனர் புருஷோத்தமன் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

ஊடகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் நானாக தான் இருப்பேன், பாராட்டப்பட்டவரும் நானாகவே இருப்பேன். என்னை வடிவமைப்பதே ஊடகத் துறையினர் தான். அவர்கள் கேட்கும் கேள்வி தான் என்னை வடிவமைக்குகிறது. எனக்கு ஊடகத் துறையினர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு தெரியாத ஒன்று இருக்கிறது என்று அதைப்பற்றி என்ன என்பதை ஆராய்வேன்.

பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவதற்கு எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகத்தில் உள்ள எட்டு கோடி தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது போல் பல்வேறு துறைகள் இருந்தாலும் ஊடகத்துறையில் உங்களுக்கு அந்தப் பணிகள் கொடுப்பது சாதாரணமில்லை.

நாட்டு மக்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு சென்று சேர்ப்பது, ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டுவது, திருத்தம் செய்வது, 2026ம் ஆண்டு புத்தாண்டு முதல் நிகழ்ச்சியாக கலந்து கொள்வது அதுவும் பத்திரிக்கையாளர்களுடன் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக இது அமையட்டும், தற்போது அதிகப்படியான பொய்ச்செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே எது பொய் எது மெய் என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும். இன்னும் 90 நாட்களில் பல்வேறு பொய்ச் செய்திகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சொன்னதை சொல்லவில்லை என்றும், சொல்லாததை சொன்னோம் என்றும் சொல்வார்கள், அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பத்திரிக்கையாளர்களோடு சேர்ந்து இந்த புத்தாண்டு கொண்டாடுவது மிகப் பெருமையாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,School Education Minister ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...