×

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 37,445 அங்கீகரிக்கப்பட்ட அட்டை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 37,445 அங்கீகரிக்கப்பட்டுள்ள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்கின்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 21வது வாரத்தில் 26வது முறையாக இன்று முகாம்கள் நடைபெற்று வருகிறது.  இன்று சென்னையோடு இணைந்து 31 மாவட்டங்களில், 44 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டு, இதன்மூலம் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் முழுமையாக மருத்துவ பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,34,908 பேரும் முழு உடற்பரிசோதனை செய்து பலன் பெற்றுள்ளனர். இந்த முகாம்களில் பயன்பெறுபவர்கள் அங்கீகரிக்கபட்ட காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளையும் உடனடியாக பெற்று செல்கிறார்கள். அவர்கள் மட்டுமே இந்த முகாம்களின் வாயிலாக 37,445 பேர் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளும் முகாமில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்கள் பெற்றிருந்தால்தான் அரசாங்கத்தின் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை எளிதாக கிடைக்கும். இந்த முகாம்களில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்,

கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மன நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்தியமுறை மருத்துவம் என்று 17 வகையான மருத்துவம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்டு வருகிறது.

இதை பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் 15 முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் வரை 11 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 12வது முகாமாக இன்று சென்னை கண்ணகிநகரில் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 26,893 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் சம்பத், மண்டல குழு தலைவர் மதியழகன், நகரநல அலுவலர் ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Nalam Kaakum Stalin ,Kannaginagar Government ,Higher Secondary ,School ,Sholinganallur ,Chennai Corporation ,
× RELATED கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி...