- சீமன்
- விஜய்
- ஸ்ரீவைகுண்டம்
- வேலுனாச்சியார் நினைவு தினம்
- தமிழ் கட்சி
- திருங்கனநல்லூர்
- தூத்துக்குடி மாவட்டம்
ஸ்ரீவைகுண்டம்: வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: அரை சதவீதம், ஒரு சதவீதம் வாக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். 8க்கும் மேற்பட்ட சதவீதம் வாக்கு வைத்திருக்கும் என்னிடம் எத்தனை பேர் பேரம் பேசி இருப்பார்கள். அதற்கெல்லாம் விலை போகாதவன் நான். நமது எச்சில் தான் பல பேர் கட்சி நடத்தி வருகிறார்கள். பிறப்பொக்கும் என்று சொன்னது முதலில் நான் தான்.
கொடியை கூட (விஜய்) வேறு வண்ணத்தில் வடிவமைக்க முடியவில்லை. அதே சிவப்பு, மஞ்சள் தான். தூய சக்தி, அதனால் என்ன? ஜனநாயகம் படத்திற்கு பிளாக் டிக்கெட் கிடையாது. எல்லோருக்கும் ஒரே டிக்கெட் தான் என்றால் அது தூய சக்தி. பிளாக்கில் டிக்கெட் விற்கிறது ஒரு கொடுமை. வீர மக்களை படியுங்கள், வீரர்களை போற்றுங்கள். வீர வரலாற்றை படியுங்கள், அவர் பின்னாடி போங்கள். நடிகன் பின்னாடி சுத்தாதீங்க என பழனிபாபா என்ற புரட்சியாளர் கூறினார். நமது கட்சியில் இருந்து தான் சிலவற்றை சுவீகரித்துள்ளார். எது போற்றத்தக்கது, எது தூற்றத்தக்கது என்று தெரியாமல் தான் பல தற்குறி கூட்டம் தற்போது உலாவி வருகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
* தேர்தல் நிதியும்… ஜிஎஸ்டியும்…
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சார்பில் கட்சிக்காக நிதி திரட்டி சீமானிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியவுடன் சாட்டை துரைமுருகன் மீண்டும் அந்த நிதியை கட்சி செலவுக்காக தாருங்கள் என்று திருப்பி வாங்கிக் கொண்டார். அதற்கு சீமான், இதுதான் ஜிஎஸ்டி கொடுப்பதுபோல் கொடுத்து திருப்பி வாங்கிக் கொள்வது என்று கிண்டல் அடித்தார்.
* ‘ஓட்டுப் போட மாட்டான்’ வாலிபர் மீது தாக்குதல்
சீமான் பேசியபோது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், போக்குவரத்திற்கு இடையூறாக நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணா பேசுங்கள், பேசுங்கள் என்று கூச்சலிட்டார். அவரை போலீசாரும், நாதகவினரும் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நாதகவினர் அவரை கழுத்தை பிடித்து தள்ளினர். போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது சீமான், அண்ணா பேசுங்கள்… பேசுங்கள் என்று சொல்லுவான். ஆனால் ஓட்டுப் போட மாட்டான், என்றார்.
