புதுடெல்லி: 2026ம் ஆண்டு ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில், 75 மாநிலங்களவை இடங்களுக்கான பதவிகள் காலியாவதால் புதிய உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில், 75 மாநிலங்களவை இடங்களுக்கான பதவிகளும் காலியாகிறது. உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களும், பீகாரில் 5 இடங்களும், மகாராஷ்டிராவில் 7 இடங்களும் காலியாக போகும் நிலையில், மத்தியப்பிரதேசம், அசாம், அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களிலும் இடங்கள் காலியாக உள்ளன.
2026ம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் மூத்த தலைவர்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, திக்விஜய சிங், சரத் பவார், ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, பி.எல்.வர்மா, ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் அடங்குவர். இவர்கள், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவார்களா அல்லது புதியவர்களால் மாற்றப்படுவார்களா என்பது தேர்தல் நேரத்தின்போதே தெரியவரும். தற்போது மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 129 இடங்களையும், இந்தியா கூட்டணி 78 இடங்களையும் கொண்டுள்ளன.
