×

45 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கே முதல்வர், துணை முதல்வர் பதவி; பாஜகவின் புதிய வியூகம் பெரும் பிளவை உருவாக்குமா? அடுத்த 20 ஆண்டுகளை குறிவைத்து 100 இளம் தலைவர்களை உருவாக்க திட்டம்

 

புதுடெல்லி: அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, போதிய அனுபவமில்லாத நிதின் நபினை தேசிய செயல் தலைவராக பாஜக நியமித்துள்ள செயல் அக்கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அடுத்த 20 ஆண்டுக்குள் 100 இளம் தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.  கடந்த 2014ம் ஆண்டு மோடி முதல் முறையாக பிரதமரான பின்னர் பாஜக தலைமையில் நிறைய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதியவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 2002ம் ஆண்டிலேயே ஜனா கிருஷ்ணமூர்த்திக்குப் பிறகு வெங்கையா நாயுடு தலைவரானபோது இதேபோன்ற பேச்சு எழுந்தது. தற்போது 2047ம் ஆண்டு வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் நோக்கில், கட்சியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு வழிநடத்தும் வகையில் 35 முதல் 50 வயதுக்குட்பட்ட சுமார் 100 இளம் தலைவர்களை அடையாளம் கண்டு வளர்க்கும் பணிகள் சத்தமின்றி நடந்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 14ம் தேதி பீகார் மாநில அமைச்சரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த 45 வயதான நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜனவரி 15ம் தேதிக்குப் பிறகு நிதின் நபின் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இப்பதவியை வகிக்கும் மிக இளைய வயது நபர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியில் அண்மைக்காலமாக மாநில மற்றும் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்புகளுக்கு 45 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 53 வயதானவர்; உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 50 வயதானவர். இதேபோல் சட்டீஸ்கர் துணை முதல்வர்கள் அருண் சாவ் மற்றும் விஜய் சர்மா முறையே 57 மற்றும் 52 வயதுடையவர்கள். பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோரும் 50 வயதுகளில் இருப்பவர்களே. இவ்வாறு மாநில அளவில் இளம் ரத்தத்தைப் பாய்ச்சியது போலவே, தற்போது தேசிய அளவிலும் இந்த மாற்றம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் நிதின் நபினின் இந்த நியமனம், அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கட்சியில் நடக்கவிருக்கும் மாபெரும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு செயல் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் 2020ல் முழுநேரத் தலைவரான ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து, தற்போது நிதின் நபின் அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். 2047ம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, துடிப்பான இளைய சமுதாயத்தின் கையில் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பதே பாஜகவின் தற்போதைய பிரதான வியூகமாக அமைந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், பாஜகவில் பெயர் வெளியிட விரும்பாத அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கட்சியை அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு வழிநடத்தும் வகையில் புதிய தலைவர்களை உருவாக்கும் மேலிடத்தின் முடிவின்படியே இந்த மாற்றங்கள் நடக்கின்றன; மாநில அளவில் அமைச்சர்களாகவும், நிர்வாகிகளாகவும் 45 முதல் 55 வயதுடையவர்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கட்சியை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்த மூத்தவர்களைத் துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்துவிட்டு, தலைமைக்குச் சாதகமானவர்களை மட்டுமே பதவியில் அமர்த்துகிறார்கள்;

இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மேலும், சாதி மற்றும் மாநில அரசியல் கணக்குகளைப் பார்த்துப் பதவி வழங்கப்படுகிறதே தவிர, உழைப்புக்கும் அனுபவத்திற்கும் எவ்வித மரியாதையும் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில், தனக்கு வேண்டாதவர்களைக் களையெடுக்கும் வேலையைத் தலைமை செய்து வருவதாகப் பேசப்படுகிறது. மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் செயல்படுவது, வரும் காலங்களில் கட்சிக்குள் மிகப்பெரிய பிளவை உண்டாக்கும் அபாயம் உள்ளது’ என்று அவர்கள் கூறினர்.

 

 

 

Tags : Deputy ,BJP ,New Delhi ,Nitin Nabin ,National ,AKKAKH ,
× RELATED சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம்...