×

பொதுத்ேதர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

பெரம்பலூர், டிச. 23: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் 10ம்வகுப்பு 12ம் வகுப்பு, அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவியர் தேர்ச்சி சதவீதம் தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) செல்வகுமார், (தனியார் பள்ளிகள்) லதா, பெரம்பலூர் மாவட்ட அரசு தேர்வுத் துறை உதவி இயக்குனர் கல்பனாத் ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் 10ம் வகுப்பு, 12ம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியரில் மாற்றுத்திறன் உடைய மாணவ மாணவியருக்கு சொல்வதை எழுதுவோர் எனப்படும் ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 2025ம் ஆண்டு நடைபெற்ற காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம், பள்ளியின் சராசரி தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மிகக்குறைந்த தேர்ச்சி சதவிகிதம் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணம் கேட்கப்பட்டதோடு, வருகிற 2026 மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரிடமும் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் ஸ்லோ லேனர் எனப்படும் திறன் மாணவர்களுக்கு அவர்களது வாசிப்பு திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தின் 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான தேர்ச்சி சதவீதம் மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற அனைவரும் பாடுபட வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags : Perambalur ,District ,Principal Education Officer ,Swami… ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி