புதுடெல்லி: ரயில் டிக்கெட் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘பொதுமக்களை சுரண்ட மோடி அரசு எந்த வாய்ப்பையும் விடுவதில்லை’’ என குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் ரயில் டிக்கெட் விலை அதிகரிக்கப்படுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 215 கிமீக்கு மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்புகளுக்கு ஒரு கிமீக்கு 1 பைசாவும், மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத வகுப்புகளுக்கும், அனைத்து ரயில்களின் ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கிமீக்கு 2 பைசாவும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மோடி அரசாங்கம் பொதுமக்களை சுரண்ட எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. இந்த ஆண்டில் 2வது முறையாக ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனி ரயில்வே பட்ஜெட் இல்லாததால், பொறுப்புக்கூறல் மறைந்துவிட்டது. திடமான செயல்பாடுகளை செய்வதை விட்டுவிட்டு, மோடி அரசாங்கம் போலியான விளம்பரங்களில் மும்முரமாக இருக்கும்போது, ரயில்வே நிர்வாகம் நோய்வாய்ப்பட்டுள்ளது. பாதுகாப்பு தடம் புரள்கிறது. இறப்புகள் அதிகரிக்கின்றன. 2014-23 காலகட்டத்தில் ரயில் விபத்துக்களில் 2.18 லட்சம் பேர் இறந்துள்ளனர். ரயில்வே இனி பாதுகாப்பானது அல்ல. அவர்கள் மக்களின் உயிருடன் சூதாட்டம் ஆடுகின்றனர்.
கவாச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. 3.16 லட்சம் காலிப் பணியிடங்கள் ரயில்வேயை சீரழிக்கின்றன. ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் அதிகரித்து வருகின்றன. லோகோ பைலட்டுகளுக்கு அடிப்படை ஓய்வு மறுக்கப்படுகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 453 நிலையங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே ஒரு நிலையம் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது. எல்லாமே ஆடம்பரமான விளம்பரங்கள் மட்டும் தான், எதுவும் செயலில் இல்லை. மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, முதியவர்களிடமிருந்து ரூ. 8,913 கோடி வசூலிக்கப்படுகிறது. 160 கிமீ வேகத்தில் இயங்கும் என்ற விளம்பர பேச்சுக்கு மாறாக, வந்தே பாரத் ரயில் 76 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்குகிறது.
மோடி அரசாங்கத்தின் கீழ், ரயில்வே புறக்கணிப்பு, அலட்சியம் மற்றும் போலியான விளம்பரங்களின் சோகமான கதையை எதிர்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
