×

பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் அமோக வரவேற்பு

*பழங்குடியின மக்களுடன் நடனம்; பரிசலில் குதூகல பயணம்

காரமடை : காரமடை அருகே பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுடன் நடனமாடி, பரிசலில் குதூகல பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https:// Coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துதான் வரவேண்டும். நேரடியாக வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. எனினும்,சுற்றுலா பயணிகளின் வருகைக்கேற்ப நேரிலும் (ஆப் லைனில்) அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியின மக்களின் சுக்கு காபியுடன் சுற்றுலா துவங்குகிறது. தொடர்ந்து, பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் பரிசல் பயணம்,பழங்குடியின மக்களின் அறுசுவை உணவு, தொடர்ந்து அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல் உடன் சுற்றுலா நிறைவு பெறுகிறது.

முழுக்க முழுக்க பழங்குடியின மக்களை வைத்து அம்மக்களுக்காகவே நடத்தப்பட்டு வரும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சியை நடத்த வனத்துறை சார்பில் திட்டமிட்டது.

அதனை தொடர்ந்து கடந்த செப். மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறை, தவுல், பீக்கி, ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை கொண்டு இசைத்தபடியே நடனமாடிய பழங்குடியின மக்களுடன் இணைந்து பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் ஆர்வத்துடன் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நடனத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நாற்காலிகளில் அமர்ந்து கண்டு ரசித்தும் வருகின்றனர். வழக்கமாகவே பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு தற்போது பழங்குடியின மக்களின் இந்த பாரம்பரிய நடனம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘‘பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களின் நலனுக்காக பரளிக்காடு சூழல் சுற்றுலா துவக்கப்பட்டது.

இதன் மூலம் சனி, ஞாயிறு, அரசு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் நாளொன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படுகிறது.

குறிப்பாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் ஆரம்பித்த பிறகு சுற்றுலா பயணிகள் இடையே பரளிக்காடு சூழல் சுற்றுலா அமோக வரவேற்பை பெற்று வருகிறது.வழக்கமாகவே இந்த சூழல் சுற்றுலாவிற்கு வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 முதல் 150 சுற்றுலா பயணிகள் வரை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகை தருகின்றனர்.

கடந்த வாரத்தில் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் வரும் நாட்களில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.

Tags : Baralikadu ,Karamadai ,Karamadai forest ,Coimbatore ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...