மயிலாடுதுறை, டிச.19: மயிலாடுதுறையில் காங்கிரஸ்கட்சி சார்பில் காந்தி பெயரிலான நூறுநாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை ‘வி பி – ஜி ராம் ஜி’ என்று புதியதாக பெயர் வைத்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் தலைமை தபால்நிலையம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் கனிவண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மகாத்மாகாந்தி பெயரை நீக்கிவிட்டு ‘வி பி – ஜி ராம் ஜி’ என்று புதியதாக பெயர் வைத்ததை கண்டித்தும், இந்த திட்டத்துக்கு முழு நிதியும் மத்திய அரசு அளித்து வந்த நிலையில், தற்போது புதிய மசோதாவில் 40 சதவீதம் மாநில அரசுகளே நிதி அளிக்கவேண்டும் என்பதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் நகர தலைவர் ராமானுஜம், வட்டார தலைவர்கள் ஜம்பு கென்னடி, அன்பழகன், ராஜா, நிர்வாகிகள் மூங்கில் ராமலிங்கம், ராமகிருஷ்ணன், சதீஷ்குமார், விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
