கமுதி, டிச.19: கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு நெல் மற்றும் மிளகாய் விவசாயம் மிகவும் பாதிப்பு அடைந்தது. இதற்கான தேசிய வேளாண் பயிர் காப்பீடு வழங்கக் கோரியும், மேலும் கமுதி கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று கமுதி தாலுகா அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கஞ்சி கலயம் ஏந்தி, காதில் பூ வைத்துக் கொண்டு நூதன காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சுற்று வட்டார பகுதி கிராமங்களான கள்ளிக்குடி, இலந்தைகுளம், பேரையூர், நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, சாமிபட்டி, சேர்ந்தகோட்டை, செங்கோட்டைபட்டி, சங்கரப்பன்பட்டி, புதுக்கோட்டை, கீழவலசை, பாக்குவெட்டி, கருங்குளம், இடையங்குளம், தொட்டியபட்டி, மருதங்கநல்லூர், கடமங்குளம், புல்வாய்குளம், உப்பங்குளம் போன்ற கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில், பயிர் காப்பீடு வழங்க கோரி கோஷமிட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு வைகை விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் மிக்கேல் முன்னிலை வகித்தார்.
இதில் மகளிரணி ராமலட்சுமி, மாவட்ட செயலாளர் மரகதவேல், சேர்ந்தகோட்டை மோகன்தாஸ், கள்ளிக்குடி செல்வேந்திரன், இலந்தைகுளம் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதி நன்றி கூறினார்.
