×

பொள்ளாச்சியில் முழு வீச்சில் பிஏபி திட்ட கால்வாய்களை தூர் வாரும் பணி மும்முரம்: கண்காணிப்புக்குழு நேரில் ஆய்வு

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே முழு வீச்சில் நடைபெறும் பிஏபி திட்ட கால்வாய் தூர் வாரும் பணிகளை கண்காணிப்புக்குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பிஏபி திட்டத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மண்டல பாசனம் வீதம், 2 ஆண்டுகளில் 4 மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுபோல், பிஏபி திட்டத்திற்கு உட்பட்ட ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 4.25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இந்த பிஏபி திட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள், நீர்வளத்துறை பொறுப்பில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்படும்போது, சேதமான குறிப்பிட்ட கால்வாய் பகுதிகளிலே பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாகவும், சேதமான கால்வாய் மூலம் தண்ணீர் விரயமாவதாகவும் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனத்திற்கு தூர்வார ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதுபோல, பரம்பிக்குளம் பாசனத்திட்ட (பிஏபி) கால்வாய்களையும் ஆண்டுதோறும் தூர்வாரி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பிஏபி கல்வாய்கள் அனைத்தும் ரூ.10 கோடியில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மேலும், பிஏபி கால்வாய்களை தூர் வாரி நடவடிக்கை மேற்கொள்ள கடந்த 3ம் தேதி, ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், பிஏபி திட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்கள் தூர் வாரி பராமரிப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது அப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி அருகே தேவம்பாடி வலசு பகிர்மான கால்வாய், அர்த்தநாரிபாளையம் கிளை கால்வாய்களில் சிறப்பு தூர் வாரும் பணி நடைபெற்றது. கால்வாய்களில் தேங்கிய மண் அகற்றப்பட்டு, நீர்வழித்தடம் சீரமைக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் பாசன காலத்தில், விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி நீர் விநியோகம் இருக்கும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொள்ளாச்சி அருகே நடைபெறும் பிஏபி கால்வாய் தூர்வாரி பராமரிப்பு பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பணியை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினர். பிஏபி கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Pollachi ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...