ராமநாதபுரம், டிச.18: கடலுக்கு செல்லும் போது வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக மீட்டு கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். வனத்துறை கடல்ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முட்டையிடும் கரையோர பகுதிகளில் திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியான காண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை சூழல் பாதிக்கப்படாமல் கடல் ஆமை முட்டைகள் பொரிப்பகங்களில் சேகரிக்கப்பட்டு குஞ்சுகள் வளர்ந்த பின் முறையான கண்காணிப்புடன் கடலில் விடப்படுகின்றன. கடல் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது தங்களது வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக கடலுக்குள் விட்ட 12 மீனவர்களுக்கு நேற்று கடல் காப்பான் விருது, பாராட்டு சான்று மற்றும் தலா ரூ.1000 ஊக்கத் தொகையினை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி பாராட்டினார். அப்போது மீனவர்களுக்கு ஆமைகளை காப்பாற்றும் வழிமுறைகள், விசைபடகு மடிகளில் கருவிகளை பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 63 மீனவர்கள் மூலமாக 124 ஆமைகள் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.
