×

கோபுரக் கலசங்களின் மகத்துவம் என்ன?

?கோபுரக் கலசங்களின் மகத்துவம் என்ன?
– ஏ. மூர்த்தி, திருவள்ளூர்.

இந்த அண்ட வெளியில் பரவியிருக்கும் தெய்வீக சக்தியை ஈர்த்து அந்த ஆலயத்திற்குத் தரும் ஏரியல் டவர் அதாவது ரிசீவர் போன்ற பணியினைச் செய்வதே கோபுரக் கலசங்கள். அந்த ரிசீவர்களை ஆக்டிவேட் செய்யும் விதமாகத்தான் கும்பாபிஷேகம் என்பது நடத்தப்படுகிறது.

?ஆலயங்களில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இரவு தங்குவது ஏன்?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

மகாசிவராத்திரி நாளைத் தவிர மற்ற நாட்களில் ஆலயங்களில் இரவு தங்குவதை ஆகம விதிகள் ஏற்கவில்லை. எந்த ஒரு ஆலயத்திற்குள்ளும் அர்த்தஜாம பூஜை முடிந்தபின் அர்ச்சகர் உட்பட யாரும் தங்கக் கூடாது. பரிகாரத்திற்காக சொல்லப்படும் ஆலயங்களில் கூட ஆலய வளாகத்திற்கு வெளியேதான் தங்கியிருப்பார்கள். அதுவும் அதிகாலையில் நடைபெறும் விஸ்வரூப தரிசனம் என்கிற நிகழ்வினைக் காண்பதற்காக. மற்றபடி அமாவாசை, பௌர்ணமி உட்பட எந்த ஒரு நாளிலும் ஆலயங்களில் இரவு நேரத்தில் தங்கக் கூடாது.

?நல்ல பாம்புடன் சாரைப்பாம்பு பின்னிப் பிணைந்திருக்கும் காட்சியை காணலாகாது என்கிறார்களே, ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.

அது ஆண் – பெண் சேர்க்கையைக் குறிக்கிறது. மனிதர்கள் உட்பட இந்த உலகில் எந்த ஒரு ஜீவராசிகளின் சேர்க்கையையும் வேடிக்கை பார்க்கக் கூடாது. ஜீவராசிகளின் சேர்க்கை என்பது சிவசக்தி ஐக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஜீவராசிகளின் சேர்க்கையை தொந்தரவு செய்யும் விதமாக நமது அருகாமையோ பார்வையோ அல்லது செயல்களோ அமைந்து விட்டால் கொடிய பாவம் என்பது வந்து சேர்ந்து விடும். அந்த சேர்க்கையை நாம் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து விடக் கூடாது என்பதற்காகவே இதனை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

?ஒரு தலைமுறை என்று 33 ஆண்டு களைக் குறிப்பதேன்?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.

இது தற்போது பரவலாக இணையத்தில் வலம் வருகின்ற கருத்தே தவிர இதற்கான ஆதாரம் நமது சாஸ்திரத்தில் காணப்படவில்லை. நாலெட்டில் பெறாத பிள்ளை என்று சொல்வார்கள் தெரியுமா, அதாவது 32 வயதிற்குள் பிள்ளைகளைப் பெற்றுவிட வேண்டும் என்பது இதன் பொருள். அந்தக் கணக்கின் அடிப்படையில் 33வது வருடத்துவக்கத்தினை இது அடுத்த தலைமுறையின் காலம் என்று இவர்களாக எண்ணியிருக்கலாம். இது அவரவர் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்தது. இருபது முதல் முப்பது வருடங்களுக்குள் இருப்பதே ஒரு தலைமுறைக்கான கால அளவு என்று சொல்வோரும் உண்டு. ஆனால் தற்காலத்தில் 10 ஆண்டுகளைக் கணக்கில் வைத்து 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ், 2.0 கிட்ஸ், ஜென் இஸட் என்று இக்கால இளைஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே.அந்தக் கணக்கின் அடிப்படையிலும் பழக்க வழக்கத்தைக் கொண்டும் தலைமுறை வேறுபாட்டினை அனுபவப் பூர்வமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். 33 வருடங்கள் ஒரு தலைமுறை என்பதற்கான ஆதாரம் நமது சாஸ்திரத்தில் இல்லை என்பதே நிஜம்.

?நண்பருக்கு காலணிகளை இலவசமாக வாங்கிக் கொடுத்தால் இருவருக்குள் பகை உண்டாகும் என்று சொல்லப்படுகிறதே? உண்மையா?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

இல்லை. நண்பருக்கு காலணிகள் வாங்கித் தருவது, காதலிக்கு கைக்குட்டை வாங்கித் தருவது போன்ற செயல்கள் உறவினைப் பாதிக்கும் என்று சொல்வதெல்லாம் மூடநம்பிக்கைதான். சாஸ்திரரீதியாக இதில் அணு அளவும் உண்மை இல்லை. காலணிகள் என்பதும் வியர்வை என்பதும் சனி என்ற கோளின் ஆதிக்கத்தினைப் பெற்றது என்பதால் இதுபோன்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சனியோடு சந்திரன் இணைந்திருந்தால் ஆழ்ந்த நட்புறவினைத்தான் தரும். பரஸ்பரம் புரிந்து கொள்ளும் தன்மையும் உள்ளத்தில் உண்மையான அன்பும் இருக்கும்போது இதுபோன்ற கருத்துக்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

?வீட்டில் புறா வளர்ப்பது தரித்திரம் என்கிறார்களே, உண்மையா?
– பி. கனகராஜ், மதுரை.

எந்த ஒரு பறவையையும் விலங்கினத்தையும் கூண்டிற்குள் வைத்து வளர்ப்பது என்பது கூடாது. சுதந்திரமாக பறந்து திரிந்து கொண்டிருக்கும் பறவை இனங்களுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். கிளி உள்பட எந்த ஒரு பறவையை கூண்டில் வைத்து வளர்த்தாலும் அது எதிர்மறையான பலன்களையே தரும்.

?அதிர்ஷ்ட தேவதை என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம்?
– கே.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.

அதிர்ஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாத என்று பொருள். கண்ணுக்குத் தெரியாத தேவதையை அதிர்ஷ்ட தேவதை என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் நம்மவர்கள் செல்வ வளத்தையே அதிர்ஷ்டம் என்று எண்ணுவதாலும் அதனைத் தரும் தேவதையாக மகாலக்ஷ்மி தாயாரை வணங்குவதாலும் அவரையே அதிர்ஷ்ட தேவதையாகக் கருதுகிறார்கள். நவகிரகங்களில் சுக்கிரனையும் திக்பாலகர்களில் வடதிசைக்கு அதிபதி ஆகிய குபேரனையும் அதிர்ஷ்டம் தருபவர்கள் என்று நம்புகிறார்கள். உண்மையான உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் எங்கு இருக்கிறதோ அங்கு அதிர்ஷ்ட தேவதை என்பவர் தானாகவே தேடி வருவார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

Tags : Gopuram Kalasams ,A. Moorthy ,Thiruvallur ,
× RELATED இரண்டாவது அனுமன்!