×

ராணுவத்தில் கிடைத்த வேலை விபத்தில் காலை இழந்த வாலிபர்: சோகத்தில் குடும்பத்தினர்

திருப்புத்தூர், டிச.17: திருப்புத்தூரில் நேற்று டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில், இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நத்தக்குளத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சரவணமுருகன்(21). இவரது நண்பர்கள் முத்துவழிவிட்டான் மகன் விக்னேஷ்(19), அயோத்திராமன் மகன் நகுலன், வெற்றிப்பாண்டியன் மகன் வினோத். இவர்கள், கொடைக்கானலுக்கு இரண்டு டூவீலர்களில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் சரவணமுருகனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், அதற்கான பணி ஆணையை திருச்சியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தகவல் வந்தது. இதனால் நண்பர்களுடன் டூவீலரில் கொடைக்கானலில் இருந்து திருச்சி சென்று, பெங்களூரில் பணிபுரிவதற்கான வேலைக்கான ஆணையைப் பெற்றுக் கொண்டு திருப்புத்தூர் வழியாக திருச்சுழிக்கு நேற்று மதியம் வந்துள்ளனர்.

இதில் சரவணமுருகனும், விக்னேஷும் ஒரு டூவீலரில் வந்துள்ளனர். விக்னேஷ் டூவீலரை ஓட்டியுள்ளார். சரவணமுருகன் அமர்ந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் விக்னேஷ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் சரவண முருகனின் வலது கால் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் ஜாக்கி கொண்டு வாகனத்தை தூக்கி மீட்கப்பட்ட அவரின் கால் நசுங்கிய நிலையில் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராணுவத்தில் வேலை கிடைத்த மறுநாளே காலில் படுகாயம் ஏற்பட்டு விபத்துக்குள்ளானது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து திருப்புத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tiruptuur ,Periyannan ,Saravanamurugan ,Nathakulam ,Trinchuzhi, Virudhunagar District ,Vignesh ,Ayothiraman ,Nakulan ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்