நத்தம், டிச.17:காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் காஞ்சிபுரத்திலிருந்து தனது தாயார் லதா (50), சகோதரர் கீர்த்தி குமார் (24) ஆகியோருடன், மதுரையில் உள்ள உறவினரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில், துவரங்குறிச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் அருகே குமரபட்டி-புதூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த கீர்த்திகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராம்குமார் மற்றும் லதா ஆகியோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்தில் பலியான கீர்த்தி குமார், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
