×

அருட்கடலாகி விளங்கும் கிருபாகூபாரேஸ்வரர்

புராணங்கள் மாபெரும் விஷயத்தை சின்னஞ் சிறு கதையாக்கிக் கூறும். அது மழலைக் கதையைவிட இன்னும் சாதாரணமாகவும் இருக்கக் கூடும். மிகச் சிறிய கதைதானே என்று நினைக்க கதைக்குள் விதையாக விதைக்குள் ஆலமரம்போல் ஒளிந்திருக்கும் தத்துவம் பெரும் விருட்சமாக விரியும். மெல்ல மேலெழுந்து பொதிந்திருக்கும் தத்துவத்தை காட்டும். தத்துவம் புரியாத குழந்தைகளுக்கு கதையாகவே தோன்றிக்கொண்டிருக்கும். ஆனால், சரியான பக்குவத்தை அடையும் சாதகர்களுக்கு கதையின் சூட்சுமத்தை தானாக வெளிப்படுத்தும்.

புரிகிறதோ இல்லையோ சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சில விஷயங்களை சொல்லி வைப்பதுபோல இந்தக் கதைகளை கர்ண பரம்பரை கதைகளாகவோ, செவி வழிக் கதைகளாகவோ சொல்லிக்கொண்டே வருவார்கள். அதே சமயம் அந்த கதையால் நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு கோயில்கள்கூட உருவாகியிருக்கும். அப்படி உருவானதே கோமல் என்கிற தலமாகும். ஒருமுறை ஈசனின் கண்களை பார்வதி மூடினாள். சட்டென்று பிரபஞ்சத்தின் இயக்கம் முற்றிலும் தடைப்பட்டது. சூரிய சந்திரர்களே ஈசனின் திருக்கண்களாக இருப்பதால் பிரபஞ்சம் இருளில் மூழ்கியது. உயிர்கள் என்ன நடந்ததென்று தெரியாது தவித்துப் போயின. இனம் புரியாத வேதனைகளில் மூழ்கினர். சட்டென்று பார்வதி தேவி கைகளை விடுவித்தாள். ஈசனும் கண்கள் திறந்தார். சட்டென்று ஈசன் கோபம் கொண்டார். வேகமாக பேசத் தொடங்கினார்.

‘‘பார்வதி, விளையாட்டு எத்தனை விபரீதமாயிற்று பார்த்தாயா. நீ செய்தது மிகப் பெரிய தவறு. அதுமட்டுமல்ல பாவமும் கூட. எனவே, பூலோகத்திற்கு பசுவாகச் செல். ஓர் ஹஸ்த நட்சத்திர நாளில் ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றும். அன்று உன்னை ஆட்கொள்வேன்’’ என்றார். முதலில் ஈசனின் கண்ணை பார்வதி பொத்தினாள் என்பதே விளையாட்டான விஷயமில்லை. ஒரே பிரம்மமாக அசலமற்றிருக்கும் சிவத்தை சக்தி சலனப்படுத்துவதையே இது குறிக்கிறது. அதாவது ஞானமே உருவாக இருக்கும் பிரம்மத்தை மாயை எனும் இருள் மூடியதுபோல ஒரு தோற்றத்தை காட்டுவதே இந்த நிகழ்வு. இங்கு சூரிய சந்திரர் என்பதெல்லாம் ஞான சூரியனும், ஞான அமுதத்தை பொழியும் சந்திரனுமேயாகும். இடையறாத ஞானப் பொழிவை சக்தி இடைநின்று தடுப்பதே ஜீவர்களின் மாயா அவஸ்தையாகும்.

மேலும், சக்தி கண்ணைப் பொத்தினாள் என்பதே பிரிவற்ற ஏகமாக உள்ள சக்தியானது சிவத்திலிருந்துதான் அந்நியமானது போன்ற ஒரு பாவனையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்கிறது. தோற்ற மாத்திரமான பிரமையை சக்தி அடைகிறது. ஆனால், ஒருகாலும் சக்தி பிரியாது. அதாவது நாம் ஒரு காலும் பிரம்மத்தை விட்டு விலகுவதில்லை. ஆனால், தான் உடல் எனும் தேகாபிமானத்தால் பிரம்மம் எங்கேயோ இருக்கிறது என்கிற பிரமை ஏற்பட்டு விடுகிறது.

ஒன்றாகவே உள்ள சிவசக்தி பிரிவதுபோல காட்டப்படும்போது சிவமான பிரம்மம் மறைந்து வெறும் கல்லும் மண்ணுமாக உள்ள உலகமாக, பிரபஞ்சமாக விரிவடைகிறது. இனி சக்தியானவள் மீண்டும் சிவனோடு சேரவேண்டும். சேருவதற்குண்டான அந்த கிரியைகளைத்தான் தியானம், தவம், பூஜை, வழிபாடு, பிரேமை என்றெல்லாம் அழைக்கிறோம். ஏன் இவ்வாறு சிவத்திலிருந்து பிரிந்து நான், நீ, அவை என்று சக்தி மாற வேண்டுமெனில் அதற்கு பதில் கிடையாது. தேவி மகாத்மியம் இதனை சக்தியின் மகாலீலை என்கிறது. தானே தன்னை தொலைத்துக் கொண்டு மீண்டும் கண்டடைகிறது என்கிறது. அப்படிப்பார்த்தோமானால் நாமும் அந்த சக்தியின் திவலைதான் என்பதை புரிந்துகொள்வோம்.

அப்படி பூவுலகத்திற்கு வந்த பசுவானது இன்றைய கோமல் எனும் தலத்தில் திரிந்தது. கூடவே திருமாலும் உடன் வந்தார். இப்படி கோ எனும் பசுவும் மால் எனும் திருமாலும் வந்ததால் இத்தலம் கோமால் என்று பெயர் பெற்றது. நாளடைவில் கோமல் என்று திரிபடைந்தது. பசுவின் தவத்தாலும், பூசையினாலும் மகிழ்ந்த ஈசன் பின்னாளில் இன்றைய திருமணஞ்சேரி எனும் தலத்தில் மணம் புரிந்து கொண்டார் என இந்தப் புராணம் பல தலங்களுக்கு விரிகிறது.

ஆனாலும், முதன் முதலாக பசுவும் திருமாலும் சேர்ந்து இறங்கிய தலமாததால் மிகவும் சிறப்பு பெற்ற க்ஷேத்ரமாக இது விளங்குகிறது. தெய்வங்களே இப்படி பசு உருவில் வந்ததாலேயே பாரததேசத்தில் பசுவை மிகவும் போற்றுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் பசுவே ஒருவர் எடுக்கும் கடைசி ஜென்மம் என்றும் இனி அவர் மீண்டும் பிறக்காத நிலையை அடைவார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் உட்பட பல்வேறு தெய்வ அவதாரங்களும் பசுக் கூட்டத்தோடு இருப்பதை அறியலாம்.

இந்த தலத்தின் புராணத்தின்படி ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியபோது பார்வதி ஈசனோடு ஐக்கியமானாள் என்று வருகிறது. ஆனாலும், அந்த ஜோதியை கண்டு கொண்டு அது ஈசனே என்பதையும் உணர்ந்து வணங்கி பிறகு மணம்புரிந்து கொண்டாள் என்றும் புராணம் உண்டு. பார்வதி தனது லீலையை நீட்டிக்க வேண்டி பசுவாக இருந்தவள் கன்னிப் பெண்ணாக மாறி ஈசனை மணம் புரிந்து கொண்டாள்.

இந்த ஜோதியை கண்டவுடன் அவளுக்குள் மகிழ்ச்சி உண்டாகி ஒரு ரிஷிக்கு மகளாக பிறக்கிறாள். அதாவது பசு பசுவாக இல்லாமல் நம் பொருட்டு மானிடப் பெண்ணாகவும் தபஸ்வினியாகவும் பல்வேறு தலங்களில் தனது யாத்திரையை தொடர்கிறாள். இதற்கான ஆதாரங்களாக இருபது தலங்களை கோமலிலிருந்து திருமணஞ்சேரி வரை தரிசிக்கலாம். இந்த புராண நிகழ்வை விளக்குவதற்கு ஆதாரமாக இக்கோயில் அமைந்துள்ளது. கோமல் அழகிய ஊராகும். ஊரின் நடுவே ஒருபுறம் சிவாலயமும் மறுபக்கத்தில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. மிகவும் சிறியதுமல்லாது பெரியதுமல்லாது நடுவாந்திரமான ஆலயம் இது. கோயிலுக்குள் நுழைந்த உடனேயே மதிற்சுவர்களும் பிராகாரச் சுவரின் கற்களுமே கோயிலின் பழமையையும் அழகையும் நமக்கு உணர்த்துகின்றன.

கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே சற்று தூரத்தில் நந்தியம்பெருமானையும் அதற்கு நேராக கருவறையில் அருளும் ஈசனையும் தரிசிக்கலாம். மெல்ல உள்ளே சென்று பார்க்க துவாரபாலகர்களுக்குப் பதில் விநாயகரையும் சுப்ரமணியரையும் தரிசிக்கலாம். ஈசனின் திருப்பெயர் கிருபா கூபாரேஸ்வரர் என்பதாகும். கூபம் என்றால் கடல் அல்லது பெருமளவு நீர் நிறைந்த நீர்நிலை என்றும் கொள்ளலாம்.

இதில் கிருபா என்பது அருளையும் கூபம் என்பது கடலையும் குறிப்பதால் கடலளவு அருட் கருணையை பொழிபவன் என்பதே முழுப் பொருளாகும். இத்தல ஈசனின் அருளை அள்ளி அள்ளிப் பருகலாம். என்றும் வற்றாத பேரருள் பெருகி வெள்ளம் போன்று வருவதை சற்று நேரம் அச்சந்நதியில் நின்றாலே நமக்குப் புரிந்து விடும்.அருகேயே அம்பாள் அன்னபூரணி எனும் திருப்பெயரோடு திகழ்கிறாள்.

அன்னம் என்பதற்கு சோறு என்றும் உயிரைத் தூண்டுபவள், உயிர் சக்தியாக விளங்கு பவள் என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இத்தலத்தின் புராணப் பொருளோடு இப்பெயரை நோக்கினால் பூரணியாக அதாவது பூரணமாக உள்ள இந்த உயிர்ச் சக்தியாக விளங்கும் அன்ன பூரணி நம்மையும் ஈசனோடு சேர்த்து வைக்கிறாள். அதன் பொருட்டே இத்தலத்தில் அன்னபூரணி எனும் திருநாமத்தோடு அழகுக் கோலம் காட்டி அருள்கிறாள்.

எல்லாமே சக்தியின் லீலைதான். வாழவும் வைப்பாள். ஈசனோடு ஈசனாக சேர்த்தும் காப்பாள். தேவி பாகவதத்தில் எவள் மாயா சொரூபிணியாக மாறி அதாவது இந்த உலகமாகவும் உயிர்களாகவும் மாறியிருக்கிறாளோ அவளே ஞான சொரூபிணியாக மாறுகிறாள். எனவே, அன்னபூரணி இத்தலத்தில் ஞானபூரணியாகத் திகழ்கிறாள். அடியவர்களின் வினைகளை அழித்து ஈசனின் பதத்தில் சேர்க்கிறாள்.

இரு கருவறைகளும் அருகருகே உள்ளன. சற்றே வாயிலுக்கு வந்தால் நல்ல உயரத்துடன் கூடிய அரிதான சங்கு சக்ரதாரியாக மகாவிஷ்ணுவின் அரிய சிலை காணப்படுகிறது. அதாவது பசுவோடு மகாவிஷ்ணுவும் சேர்ந்து பயணப்பட்டார் என்பதற்கு ஆதாரமான சிலை இதுவேயாகும். மாபெரும் புராணத்தை இப்படி சிலைகளின் ஆதாரத்தோடு சேர்த்துச் சொல்லும் கோயிலின் பிராகாரத்தை அடைந்தோம். விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான், துர்க்கை என்று பல்வேறு கருவறை கோஷ்ட மூர்த்தியை தரிசிக்கலாம்.

நவகிரகங்களை வணங்கிவிட்டு கோயிலின் வாயிலின் முன் வீழ்ந்து பரவும்போது மூடியிருந்த பார்வதியின் கரங்கள் விலகி ஈசனின் திருக்கண்கள் நம்மீது படிவதை உள்ளுக்குள் உணரலாம். இத்தலம் மயிலாடுதுறை – கும்பகோணம் பாதையிலுள்ள குத்தாலத்திற்கு அருகேயே அமைந்துள்ளது. இதுதவிர ஆடுதுறை – தரங்கம்பாடி பாதையில் பயணித்தாலும் இத்தலத்தை அடையலாம்.

Tags : Arubakubareswarar ,Arudkadalagi ,
× RELATED என்றென்றும் அன்புடன் 8