ஜெயங்கொண்டம், டிச.13: புதிய பாரத எழுத்தறிவு திட்டம், மாவட்ட அளவிலான அடிப்படை எழுத்தறிவு தேர்வு ஆயத்த கூட்டம் நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், அரியலூர் மாவட்டம் ,புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் அடிப்படை எழுத்தறிவு திட்டம் சார்ந்த ,முன் ஆயத்த கூட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் இணை இயக்குனர் பொன் குமார் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதோருக்கு 100 சதம் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் இலக்கினை அடைய மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் , இத்திட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும் கருத்துரை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வெற்றிச்செல்வி, மாநில ஒருங்கிணைப்பாளர் மாயஅழகு, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆய்வாளர் பழனிச்சாமி, செல்வகுமார் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், த. பழூர் மற்றும் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில், திருமானூர், அரியலூர் மற்றும் செந்துறை ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் திட்டத்தினை செயல்படுத்தி வரும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று அனைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்திலும் அடிப்படை எழுத்தறிவு தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி செய்திருந்தார்.
