இலுப்பூர்,டிச.13: இலுப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் தீர்வு காணப்பட்டது. இலுப்பூரில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் முகாம் நடைபெற்றது. இலுப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அழகர், சமூக ஆர்வலர் அமலோர்பவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை இலுப்பூர் நடுவர் சாதத்துனிஷா தொடங்கி வைத்தார்.
பாரத ஸ்டேட் வங்கிகளில் தனிநபர் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று செலுத்தாமல் நிலுவையில் உள்ள நபர்களுக்கு அழைப்பானை அழைத்து சமரச தீர்வு நடத்தப்பட்டது. இதில் 100 மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் தீர்வு காணப்பட்டது. இம்முகாமில் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் லோகேஸ்வரி கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்டத் தன்னார்வ பணியாளர் ஆரோக்கிய சோபியா செய்திருந்தார்.
