கந்தர்வகோட்டை, டிச. 13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் எம்எல்ஏ சின்னதுரை உள்ளூர் மேம்பாட்டு தொகுதி நிதியில் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் புவனா வரவேற்றார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.6,10,800 மதிப்பீட்டில் 6 நபர்களுக்கும், தமிழக அரசு மூலம் ரூ.15,27,000 மதிப்பீட்டில் 15 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
5 நபர்களுக்கு ரூ.32,500 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், ரூ. 1,59,390 மதிப்பீட்டில் திறன்பேசி கருவியும் மேலும் ரூ.2,28,800 மதிப்பீட்டில் சிறப்பு நாற்காலியும் வழங்கபட்டது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.25,58,490 ஆகும். இதில் மாவட்ட திமுக செயலாளர் கே.கே செல்லபாண்டியன் பேசுகையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மாற்றுதிறனாளிகளுக்கு கூடுதல் நலத்திட்ட உதவிகள் வேண்டுமென கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். எம்எல்ஏ சின்னதுரை பேசுகையில், மாற்று திறனாளிகளுக்கு கேட்கும் உதவிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்யப்படும் என்றார்.
இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களாகோயில் பரமசிவம் , வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழய்யா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், தாசில்தார் ரமேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, வர்த்தகர் சங்க தலைவர் பழ.மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் முரளி மற்றும் மாற்று திறனாளிகள் நல அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
