×

தஞ்சையில் பொதுமக்களுக்கான சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி: மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், டிச.13: தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) இணைந்து பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரையின்படியும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான வேல்முருகன் வழிகாட்டுதல் மற்றும் தலைமையில் இம்முகாம் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகளை உணர்த்தும் வகையில், குந்தவை அரசு மகளிர் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அவர்லேடி கல்லூரி தஞ்சாவூர் மாணவ, மாணவிகள் பேரணியையும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் உள்ளமைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் தொடர்பான கண்காட்சி பொருட்களை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கி பொதுமக்களிடம் நாம் அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்டுமாறும், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டும் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து ஒட்டுமாறும் அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் சாலையில் நடந்து செல்லும் போது சாலையில் உள்ள டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு வாகனமானது ராமநாதன் மருத்துவமனை முதல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தலைமையிடத்து அனைத்து கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள, மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பாரதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் உதவி மேலாளர்கள் ராஜ்மோகன், ராஜேஸ் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur ,Chief Judge ,Thanjavur District Legal Services Commission ,Tamil Nadu State Transport Corporation ,Kumbakonam ,Madras High Court ,Tamil Nadu… ,
× RELATED ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் செய்யாறில்