திருவாரூர். டிச.13: திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு 369 எண்ணிக்கையில் அதிநவீன வான்செய்தி கருவிகளை எஸ்.பி கருண்கரட் வழங்கினார். தமிழகத்தில் போலீஸ் துறையில் வாக்கிடாக்கி என்பது முக்கிய கருவியாக இருந்து வருகிறது. நவீன காலத்திற்கேற்ப விஞ்ஞான ரீதியாக தொழில்நுட்பம் நிறைந்த டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட கருவிகள் தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு டிஜிட்டல் வாக்கிடாக்கியும், இவர்கள் பணியாற்றி வரும் ஸ்டேசன்களில் பொருத்தகூடிய டிஜிட்டல் கருவிகளும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி கருண்கரட் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.பி கருண்கரட் பேசியதாவது: தமிழக காவல் துறையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக வான்செய்தி கருவிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. அன்றாட காவல் பணிகள், அவசர நிலைமைகள், குற்றத்தடுப்பு, கூட்டத்தை கட்டுபடுத்துவது போன்ற பணிகளில் இந்த கருவிகள் பெரிதும் உதவுகின்றன. தமிழக அரசின் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வான்செய்தி கருவிகள் மாவட்டத்தில் புதிதாக தற்போது முதல்கட்டமாக டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு 190 எண்ணிக்கையில் வான்செய்தி டிஜிட்டல் வாக்கிடாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டிஎம்ஆர் ரிப்பீட்டர்- கருவி 9 எண்ணிக்கையிலும், ஸ்டேடிக் செட்ஸ்- கருவி 80 எண்ணிக்கையிலும், மொபைல் செட்ஸ்- 90 எண்ணிக்கையிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முலம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், கட்டுப்பாட்டு அறைகள், காவல் வாகனங்கள், ரோந்து வாகனங்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இந்த கருவிகள் மாவட்டம் முழுவதும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தகவல் பரிமாற்றம் சீராகவும் தெளிவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கருவிகளின் உதவியுடன் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதால், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளின் போது, சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள காவல் பணியாளர்களை மிக விரைவாக அனுப்பி செயல்படுத்தும் திறன் அதிகரிக்கும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கல் மற்றும் அவசர நிலைகளில் உடனடியாக தீர்வு காணப்படுவதற்கும் இந்த கருவிகள் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு எஸ்.பி கருண்கரட் தெரிவித்துள்ளார்.
