- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாகப்பட்டினம்
- கடற்றொழில் மற்றும் மீனவர்கள் நலத்துறை
- வெள்ளாறு ஆறு
- செருதூர்
- நாகப்பட்டினம் மாவட்டம்
- வேலன்காணி கடற்கரை
நாகப்பட்டினம், டிச.12: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாற்றில் ரூ.21 கோடியே 83 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு சுவர் எழுப்பி, தூர் வாரும் பணி, வேளாங்கண்ணி கடற்கரையில் ரூ.17 கோடியே 78 லட்சம் மதிப்பில் நேர்கல் சுவர் கொட்டுதல், வேளாங்கண்ணியில் ரூ.84 லட்சம் மதிப்பில் மீன்ஏலக்கூடம் கட்டுதல், காமேஸ்வரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மீன் ஏற்றும் தளத்துடன் கூடிய மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (வியாழன்) நடைபெற்றது.
மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சரவணக்குமார் வரவேற்றார். நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, கீழையூர் வட்டார ஆத்மாகுழு தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பேசியதாவது: கடலோர மக்களுக்கு தேவையானதை முதல்வரிடம் எடுத்து கூறி அதை சட்டசபையில் அறிவிக்க செய்து இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுகிறது.
நமது முதல்வர் பொறுப்பேற்ற ஆட்சி காலம் முதல் மீனவ சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பார்த்து பிற மாநிலங்கள் வியந்து வரும் நேரத்தில் ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன், ஒரே தேர்தல் என கூறிவருகிறது. நகர் பகுதி, கிராம பகுதி, விவசாயிகள், மீனவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவரும் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கஜானா காலியாக இருந்தது. ஆனால் கொரோனா கால நிதியை அனைவருக்கும் வழங்கினார். முதல்வர் தொடர்ந்து பணியாற்றியதால் தமிழகம் இன்று தொழில் முதலீட்டில் சாதனை படைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர். இதுதான் வளர்ச்சி. இந்த வளர்ச்சியை கண்டு தான் உலக நாடுகள் தமிழகத்தை கண்டு வியப்பு அடைகிறது. தமிழ்நாட்டிற்கே ஒட்டு மொத்த பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த பாதுகாப்பு சுவர் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் முதல்வர் இன்று செயல்படுத்தி வருகிறார். எஸ்ஐஆர் பணி 11ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது. எனவே வரும் நாட்களில் அதிகாரிகள் அரசு பணிகளில் ஈடுபடுவார்கள். நாம் வாழ்வதற்கு உரிய அடையாளம் வாக்குரிமை. எனவே எஸ்ஐஆர் திருத்த பணியில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பேசினார். விழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் டயானா ஷர்மிளா, செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
