சிவகங்கை, டிச. 12: சிவகங்கையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகளை போலீசார் மீட்டனர். சிவகங்கை வள்ளி நகரில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 56 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச.7ம் தேதி இரவு இங்கு தங்கியிருந்த தேவகோட்டை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளை சேர்ந்த மூன்று சிறுமிகள் காப்பகத்தில் உள்ள கழிவறை ஜன்னல் வழியாக தப்பி சென்றனர். தப்பிய சிறுமிகளில் இருவர் 14 வயதும், ஒருவர் 16 வயதும் உடையவர்கள். இச்சம்பவம் குறித்து காப்பக வார்டன் பாக்கியலட்சுமி சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய சிறுமிகளை தேடி வந்தனர். சிறுமிகளை மீட்க சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த சிறுமி அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு போலீசார் மீட்டனர். மற்ற 2 சிறுமிகளும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக சிறுமிகளோடு தொடர்பில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலியனூரை சேர்ந்த சூரியவேல் (21), திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரை சேர்ந்த காளிமுத்து (21) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
