×

சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடுவதை தடுக்கவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுகிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் சூறையாடப்படுவதை தடுக்க எஸ்ஐஆர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி, வால்டாக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.2.81 கோடியில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட முதல்வர் படைப்பகம் இதுவரை 3 திறக்கப்பட்டுள்ளது. திமுக 200 தொகுதிகளில் வெல்வோம் என சொன்னதால் எடப்பாடி பழனிசாமி 210 இடங்களில் வெல்வோம் என சொல்கிறார். நாங்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொன்னால், எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே போய் 244 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இல்லாததை சொல்வார். ஏட்டிக்கு போட்டியாக பேசுவது தான் எடப்பாடி பழனிசாமியின் வேலை. அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும். அரசியல் நாகரிகத்தோடு எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும். திமுக மீது வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். கரையான் புற்று போல் அதிமுக கரைந்து கொண்டு செல்கிறது.

திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடி விடக்கூடாது என்பதற்காக எஸ்ஐஆர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Tags : Minister ,P.K. Sekarbabu ,Chennai ,DMK ,Development ,Chennai High School ,Waldox Road, Chennai Port Assembly ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...