– வண்ணை கணேசன், சென்னை.
நமது உடல் ஆரோக்யம் கருதி அநாமிகா என்று அழைக்கப்படும் மோதிர விரலில் மட்டும்தான் மோதிரத்தை அணிய வேண்டும். ஒரு சில கிரியைகளில் தர்ஜனீ என்று அழைக்கப்படும் ஆள்காட்டி விரலிலும் அணிந்து கொள்வதற்கு அனுமதி உண்டு. அங்குஷ்டம் என்று அழைக்கப்படும் கட்டை விரல் நமது கரத்தின் ஆதார சக்தி. மற்ற நான்கு விரல்களும் கட்டை விரல் இருந்தால் மட்டுமே பலனைத் தரும். கட்டை விரல் இல்லாவிடில் மற்ற நான்கு விரல்களுமே பயனற்றவைதான். அந்தக் கட்டை விரலே வேர் போன்றது. அது சுதந்திரமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வளையமும் அதனை கட்டுப்படுத்தக் கூடாது. மத்யமம் என்று அழைக்கப்படும் நடுவிரல் என்பது விரல்களில் நீளமானது. அதில் மோதிரத்தை அணியும்போது தான் என்கிற அகந்தை கூடுவதோடு உடல் ஆரோக்யமும் பாதிக்கப்படும். இது எல்லாவற்றையும்விட மோதிரவிரலில் இருக்கும் புள்ளியே நமது உடலின் இயக்கத்தை சீராக்கும் பொத்தானைப் போன்றது. அந்த இடம் அழுத்தம் பெறும்போது ரத்த ஓட்டம் என்பது சீராக அமைந்து ஆரோக்யம் சிறக்கும் என்பதாலேயே மோதிரவிரலில் மட்டுமே மோதிரத்தை அணிய வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறார்கள்.
?பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் சாபம், பாவம், தோஷங்கள் தீருமா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாயச, ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: என்று ஸ்ம்ருதி சொல்கிறது. அதாவது வேதம் கற்று முறையான அனுஷ்டானங்களை பின்பற்றி வரும் பிராமணர்களையும் பசுவையும் வணங்கி அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கி உதவுவதன் மூலம் பகவானின் அருளினைப் பெறலாம் என்று பொருள். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது புல்கட்டு, வைக்கோல், தீவனம் வாங்கித்தருவதாலும் பசுவினைப் பராமரிக்க உதவுவதாலும் புண்ணியம் என்பது வந்து சேரும். புண்ணியம் என்பது வங்கியில் உள்ள நமது சேமிப்புக் கணக்கில் தொகை சேர்ந்து வருவதைப்போல. பாவம், சாபம், தோஷம் என்பதெல்லாம் வங்கியில் நாம் வாங்கியிருக்கும் கடன்தொகை போல. அவை அனைத்தும் லோன் அக்கவுண்ட் என்ற கணக்கில் வருகிறது. கடன்தொகை பெரிதாக இருக்கும்போது அதனை அடைக்க சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை போதுமா என்பதை யோசிக்க வேண்டும். கடன் தொகையை அடைக்க அதற்கேற்றவாறு பணத்தை சம்பாதித்து அடைக்க வேண்டும். எந்தவிதமான சாபங்கள், தோஷங்கள் உள்ளன என்பதை அறிந்துகொண்டு அதற்குரிய பிராயச்சித்தங்களை முறையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டும் பாவம் தொலைந்து விடாது, அதற்குரிய தண்டனையை கண்டிப்பாக அனுபவித்துத்தான் அதுபோன்ற சாபங்களையும் பாவங்களையும் தீர்க்க இயலும். அதாவது லோன் அக்கவுண்ட்டில் பணத்தை திரும்ப செலுத்தி வரும் ஒருவருக்கு சேமிப்புக் கணக்கிலும் சேமிப்புத்தொகை உயர்ந்துகொண்டே வரும்போது மனதில் தைரியம் என்பதும் இருந்துகொண்டே இருக்கும் அல்லவா. அதுபோல செய்த பாவங்களுக்கு உரிய அந்த தண்டனையை அனுபவிப்பதற்கு உரிய தைரியத்தையும் உடல் பலத்தையும் மனோ பலத்தையும் இந்த பிராயச்சித்தங்கள் தரும் என்பதே உங்களது கேள்விக்கான நேரடியான பதில்.
?குலதெய்வத்தின் அருள் நமக்குக் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
– த. நேரு, வெண்கரும்பூர்.
பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோர்க்கு எல்லா தெய்வத்தினுடைய அருளும் கிடைக்கும். குறிப்பாக குலதெய்வம் என்று வரும்போது நமது குலத்தில் உள்ள எல்லோருடனும் ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும். உடன்பிறந்தோருக்கு துரோகம் செய்துவிட்டு குலதெய்வக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் இல்லை. அதனால்தான் குலதெய்வம் கோவிலுக்கு பங்காளிகள் அனைவரும் இணைந்து செல்ல வேண்டும் என்ற பழக்கத்தினை உருவாக்கி வைத்தார்கள். காலச்சூழல் காரணமாக அண்ணன், தம்பிகளில் யாரேனும் ஒருவர் வர இயலாவிட்டால் அவரிடத்திலும் தகவலைச் சொல்லிவிட்டு அவர் சார்பாகவும் பிரார்த்தனையை முன்வைத்து குலதெய்வத்தின் ஆலயத்தில் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். உடன்பிறந்தோர், பங்காளிகள் மற்றும் நம் குலத்தில் உள்ளோர் என அனைவரையும் அரவணைத்து எல்லோருடனும் அன்புடனும் பாசத்துடனும் நடந்துகொள்வோருக்கு குலதெய்வத்தின் அருள் என்பது
நிச்சயமாகக் கிடைக்கும்.
?சிலர் திருஷ்டிக்கு யானையின் கண் படத்தை மாட்டி வைக்கிறார்களே, பலன் தருமா?
– ராமநாதன், திருச்சி.
தராது. இதெல்லாம் மூடநம்பிக்கையே. கண் திருஷ்டி கணபதி படத்தை மாட்டி வைத்து பூஜித்து வந்தால் பலன் கிடைக்குமே தவிர வெறுமனே யானையின் கண் படத்தினை மாட்டி வைப்பதால் திருஷ்டி தோஷம் விலகும் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை.
?திருமணம் நடைபெற பார்வதி பரமேஸ்வர மந்திர ஜபம் செய்தால் போதும் தானாக திருமணம் நடந்துவிடும், வீட்டில் யாரும் பெண் தேட வேண்டாம், அதுவாகவே வரன் வரும் என்று என் உறவினர் ஒருவர் கூறுகிறார், பலன் கிடைக்குமா?
– சதீஷ்குமார், வேலூர்.
எவன் ஒருவன் இயங்கிக் கொண்டிருக்கிறானோ அவனே பலனை அடைகிறான் என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் வெறுமனே மந்த்ர ஜபம் செய்வதால் மட்டுமே பலனை பெற இயலாது. மந்த்ர ஜபம் செய்யாதவர்கள் இல்லங்களிலும் திருமணம் என்பது நடந்துகொண்டுதானே இருக்கிறது. இது அவரவர் ஜாதக பலத்தினைப் பொறுத்தது. ஜாதகத்தில் திருமணத்தடை உள்ளவர்கள் இதுபோன்ற மந்த்ர ஜபத்தினைச் செய்துவருவதன் மூலம் பலனைப் பெற இயலும். அப்பொழுது கூட முயற்சித்தால் மட்டுமே பலன் கிடைக்குமே தவிர வரன் தேடாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தால் நிச்சயமாக பலன் கிடைக்காது.
?தேவி, பூதேவி என்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?
– மு. விஜயராணி, ராமநாதபுரம்.
என்றால் மகாலக்ஷ்மி. பூ என்றால் பூமாதேவி அதாவது பூமித்தாய். தேவி என்கிற வார்த்தை மகாலக்ஷ்மி தாயாரையும் பூதேவி என்கிற வார்த்தை பூமாதேவியையும் குறிக்கும். தேவி என்பவர் இச்சாசக்தி. பூதேவி என்பவர் கிரியா சக்தி. இந்த இரண்டு சக்திகளும் இணைந்திருக்கும் ஸ்வரூபம்தான் நாராயணன் எனும் ஞானசக்தி.
?கிரிவலம் சுற்றிவரும்போது பக்தர்கள் தரும் உணவை உட்கொள்ளலாமா?
– கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
ஆலயத்தைச் சுற்றி வலம் வரும்போது யாரேனும் பிரசாதம் தந்தால் வாங்கி உட்கொள்கிறோம் அல்லவா. அதுபோலத்தான் இதுவும். இந்த உலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் இறைவனின் அருட்பிரசாதம்தான். கிரிவலம் சுற்றி வரும்போது களைப்பாக யாரும் உணரக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற பிரசாதங்களை ஆங்காங்கே வழங்கி வருகிறார்கள். அதனை வாங்கி உட்கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை.
