சென்னை : சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் முழு கட்டுப்பாடும் தமிழ்நாடு அரசிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையிலான 25 கிமீ ரயில் சேவையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 67% பங்குகளை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்திய ரயில்வேயிடம் ரூ. 600 முதல் ரூ.700 கோடி கொடுத்து பறக்கும் ரயில் சேவையை கைப்பற்ற உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதமோ அல்லது ஜனவரி மாதமோ கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கைப்பற்றும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பறக்கும் ரயில் சேவை திட்டத்திற்காக உலக வங்கியிடம் தமிழ்நாடு அரசு ரூ.4000 கோடி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரூ.1000 கோடி புதிய ரயில்கள் வாங்குவதற்காக செலவிடப்படும். திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்று 2027ம் ஆண்டில் மெட்ரோ தரத்திலான சேவையை பறக்கும் ரயில்களில் வழங்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
