×

வாகன சோதனையின் போது போதையில் வந்தவரை மடக்கியபோது பயங்கரம் கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: வாலிபர் கைது

சென்னை: கோவிலம்பாக்கம் அருகே வாகன தணிக்கையின் போது, போதையில் கார் ஓட்டி வந்தவர் நிற்காமல் அதிவேகத்தில் சென்றதால், அவரை காவலர் பைக்கில் விரட்டி சென்றபோது, ஆத்திரமடைந்த போதை வாலிபர், கார் ஏற்றி காவலரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய காவலர் மேகநாதன் (33). நேற்று முன்தினம் நள்ளிரவில் சக போக்குவரத்து போலீசாருடன் பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்திய போது, போதையில் அந்த காரை ஓட்டி வந்தவர், நிற்காமல் வேகமாக சென்றுள்ளார்.

உடனடியாக காவலர் மேகநாதன் தனது பைக்கில் அந்த காரை துரத்தி சென்றுள்ளார். பள்ளிக்கரணை அருகே, காவலர் அந்த கார் முன் தனது பைக்கை நிறுத்தி, கார் ஓட்டி வந்தவரை வெளியில் வரும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பைக் மீது காரை மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காவலர் மீது, காரின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். போதை ஆசாமி அப்படியே காரை இயக்கியதால், சுமார் 20 மீட்டர் தூரம் காவலர் காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார். அந்த வழியாக வந்த பள்ளிக்கரணை செக்டார் ரோந்து காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் சிவசங்கர் ஆகியோர், படுகாயமடைந்த காவலர் மேகநாதனை உடனடியாக மீட்டு, பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மருத்துவமனைக்கு சென்று அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் யார், என கண்டறிய அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், காரை ஓட்டியது நங்கநல்லூர், 20வது தெருவை சேர்ந்த சாய்ராம் (30) என தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் குடும்பத்தோடு இசிஆர் சாலையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது வாகன தணிக்கை செய்த காவலர் எனது காரை நிறுத்த கூறினார். நான் போதையில் இருந்ததால் காரை நிறுத்தாமல் சென்றேன். காவலர் பின் தொடர்ந்து பைக்கில் வந்து மறித்ததால், பயத்தில் அவர் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். வீட்டுக்கு சென்றவுடன், ஒன்றரை மணி நேரம் கழித்து, போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chennai ,Kovilambakkam ,Chennai Madipakkam… ,
× RELATED கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது